கிளைகளில் இதை நோட்டிஸாக தயார் செய்து விநியோகிக்கவும்
மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.
மிஃராஜ் ஓர் அற்புதம்
மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)
ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.
ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!
அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)
ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.
இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)
இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.
(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)
இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.
நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.
அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.
எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மிஃராஜ் நடந்தது எப்போது?
மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.
ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.
உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.
யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ர) ஆகியோர் கூறுகின்றார்கள்.
ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை
நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?
மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.
ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.
"மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்" என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.
இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.
அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.
6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.
3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.
இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.
இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)
இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16)
அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.
லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும். இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.
இவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா?
யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (59:7)
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" என்று கூறுவீராக!
"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்" எனக் கூறுவீராக! (3:31, 32)
எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205)
உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55)
ஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560)
எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!
மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்
மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, "சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்" என்று அல்லாஹ் கூறினானாம்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். "என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?" என்று நபிகளார் கேட்ட போது, "இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்" என்று ஜிப்ரீல் கூறினாராம்.
3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, "முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்" என்று அபூபக்ர் (ர)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்று நபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளே போய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ் இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, "நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது" என்று அல்லாஹ் கூறினானாம். "அபூபக்ரின் குரல் கேட்டதே" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, "நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்று ஒரு மலக்கைப் பேச வைத்தேன்" என்று அல்லாஹ் கூறினானாம்.
4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டு ரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று ஜிப்ரீல் நினைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று அல்லாஹ்வும் நினைத்தானாம். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம்.
5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ் என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் இரண்டு வகையுண்டாம். உடல்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிக்கும் தரிசனத்திற்கு ரூஹானியத்தான மிஃராஜ் என்றும், நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மிஃராஜ் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் கதை விட்டுள்ளார்கள்.
6. ரூஹானிய்யத்தான மிஃராஜ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய நபிமார்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், அவுயாக்கள் போன்ற நல்லடியார்களுக்கும் இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ் ஏற்பட்டுள்ளது என்று கதை விட்டு, மாபெரும் அற்புத நிகழ்வான நபிகள் நாயகத்தின் விண்ணுகப் பயணத்தையே கேக் கூத்தாக்கியுள்ளனர்.
7. நபி (ஸல்) அவர்களுக்கு ரூஹானிய்யத்தான மிஃராஜ் 33 தடவை ஏற்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாம். முஹைதீன் அப்துல் காதர் ஜீலானிக்கு ரூஹானியத்தான மிஃராஜ் ஏற்பட்ட போது முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினானாம். அப்போது நடந்த உரையாடல் நாசூத், மலகூத், ஜபரூத், லாஹுத் என்பதையெல்லாம் அல்லாஹ் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கற்றுக் கொடுத்தானாம்.
இன்னும் இது போன்ற ஏராளமான கதைகளையும், கப்ஸாக்களையும் மிஃராஜின் பெயரால் அவிழ்த்து விட்டுள்ளனர்.
சில சம்பவங்களை விமர்சிக்கும் போது, இந்த வசனத்திற்கு இந்தச் சம்பவம் மாற்றமாக அமைந்துள்ளது என்றும், இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் விளக்கமளிப்போம். ஆனால் குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டு விளக்க முடியாத அளவுக்கு, சாதாரண மக்கள் இவற்றைப் படித்தால் கூட கப்ஸாக்கள் என்று விளங்கும் அளவுக்கு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.
அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் காட்டுவதற்காக, நபி (ஸல்) அவர்களுக்கு அவன் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதத்தைக் கூற வந்தவர்கள் அல்லாஹ்வைக் கே செய்யும் விதமாக, அவனைப் பலவீனமானவனாக சித்தரிக்கக் கூடிய கதைகளை எழுதி வைத்து, பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.
முஃமின்களின் ஈமானைச் சோதிப்பதற்காக மிஃராஜ் எனும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்தினான். ஆனால் இவர்களோ ஈமானுக்கே வேட்டு வைக்கக் கூடிய விதத்தில் அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும், ஜிப்ரீல் (அலை) அவர்களையும் மட்டம் தட்டி எழுதி வைத்துள்ளது தான் வேதனை!
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? (அல்குர்ஆன் 7:37)
"என் மீது பொய் சொல்வதென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் மாபாதகச் செயலாகும். எனவே இது போன்ற கதைகளைப் புறக்கணிப்போமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக